கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ‘வாழ 2’ திரைப்படம் வெளியாகியது. இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற ‘வாழ’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டதாகும். முதல் பாகத்தை விட அதிகமான வரவேற்பைப் பெற்ற இந்த இரண்டாம் பாகம், ரூ.200 கோடிக்கும் மேற்பட்ட வசூலை ஈட்டி, இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ‘வாழ 2’ திரைப்படத்தின் தெலுங்கு மொழிமாற்ற பதிப்பு இன்று ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகியுள்ளது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக படக்குழுவினர் ஐதராபாத் சென்றுள்ளனர். அங்கு, நடிகர் நானி மூலம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் நடிகர் ராம்சரணை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துக்களைப் பெற்றனர்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரபல மலையாள இயக்குநருமான விபின் தாஸ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் உள்ள பல முன்னணி பிரபலங்களுடன் நெருங்கிய நட்பில் இருப்பதால், நானி மற்றும் ராம்சரண் ஆகியோர் இந்த படத்தின் புரமோஷனில் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
