‘போர் தொழில்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘கர’ ஆகும். இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்; ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொண்டுள்ளார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், 1990-களில் ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் ‘கர’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுகக் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடிகை மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன
நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது
