நடிகர் சிலம்பரசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தனது உணவுப் பழக்கங்கள் குறித்து சிலம்பரசன் பகிர்ந்துகொண்டபோது, “எனக்கு மிகவும் விருப்பமான உணவு பிரியாணிதான். ஆனால், இளமைக் காலத்தில் எதைச் சாப்பிட்டாலும் உடல் மாற்றமின்றி இருக்கும். ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பிறகு தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் உணவுப் பழக்கத்தில் கடுமையான கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய நிலை உருவானது. உணவுகளை பற்றிய புரிதல் உடல்நலத்திற்கு அவசியம்.
முன்பு அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்த நான், தற்போது சைவ உணவுக்கு மாறியுள்ளேன். அசைவ உணவு உட்கொண்டால் வயிறு முழுமையாக நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், சைவ உணவு உடலுக்கு இலகுவாக இருப்பதோடு, அதிக எடை சேராமல் இருக்க உதவுகிறது” என தெரிவித்துள்ளார்.
