இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான ‘பிரேமலு’ ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இயக்குநர் கிரிஷ் ஏடி உள்ளிட்ட அதே படக்குழுவினர் மீண்டும் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் இருந்தன. ‘பிரேமலு’ திரைப்படத்திற்குப் பிறகு நஸ்லன் ‘ஆலப்புழா ஜிம்கானா’ திரைப்படத்தில் நடித்தார்; அந்தப் படமும் வெற்றியைப் பெற்றது. இதேவேளை, மமிதா பைஜூ தமிழ்த் திரையுலகில் முக்கியமான நாயகியாக வளர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் இயக்குநர், நடிகருமான திலீஷ் போத்தன், “பிரேமலு-2 திரைப்படம் உருவாகும் வாய்ப்பே இல்லை. அதற்கு பதிலாக ‘பத்தேலம் குடும்ப யூனிட்’ திரைப்படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ‘பிரேமலு-2’ திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
