என் படத்தின் மீதான விமர்சனங்களை சமநிலைப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இல்லை – இயக்குனர் வெற்றிமாறன்!

நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த வானம் கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக ‘வேர்ச்சொல்’ இலக்கிய திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலக்கியம் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டனர். “விளிம்பு நிலை பார்வையில் இலக்கியமும், சினிமாவும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் இயக்குநர் வெற்றிமாறன் பேசினார். அப்போது, “உங்கள் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் கோபமும் எதிர்ப்பும் சிலரால் வன்முறையாக பார்க்கப்படுகிறது. அதை நீங்கள் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், அப்படிப்பட்ட விமர்சனங்களை சமநிலைப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இல்லை. இன்றைய காலத்தில் மிக முக்கியமானது சமத்துவம். அதை எப்படியாவது அடைய வேண்டியது அவசியம். அந்த வழியில் வன்முறை இடம்பெற்றாலும் அது தவறு அல்ல. ஆனால் அது உடல்ரீதியான வன்முறை அல்ல; நம்முடைய பணிகள் மற்றும் படைப்புகளின் மூலம் வெளிப்பட வேண்டியது. மேலும் இப்படியான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பெரும்பாலும் சலுகை பெற்ற நிலைப்பாட்டிலிருந்து பேசுபவர்கள். சாதியைக் கொண்டாடும் படங்களை வாழ்வியல் படங்களாகவும், சாதி எதிர்ப்பை பேசும் படங்களை சாதிய படங்களாகவும் சொல்லும் பழக்கம் தொடர்கிறது. சமத்துவத்தைப் பேசும் படங்கள் மட்டுமே இருந்ததாக கூறுபவர்கள் எடுத்த படங்களின் பெயர்களைப் பார்த்தால் அதுவே வியப்பாக இருக்கும். சில சமயங்களில் அவர்களுக்கு அந்த அடிப்படை புரிதல்கூட இல்லை போல தோன்றுகிறது.

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் ஒரு கற்றல் அனுபவமாகவே உள்ளது. இயக்குநராக இருப்பது ஒரு பெரிய பொறுப்பு. 250 முதல் 1000 பேர் வரை உள்ளவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் நிலை தினமும் நமக்குக் கிடைக்கிறது. அந்தப் பொறுப்புணர்வுடன் நாம் செயல்படுகிறோமா? முந்தைய படத்தை விட இப்போது மேம்பட்டிருக்கிறோமா? என்ற கேள்விகளை நாமே நம்மிடம் கேட்க வேண்டும். நான் செய்த தவறுகளிலிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறேன். நாம் அனைவரும் சமத்துவத்தை நோக்கி பயணிக்கிறோம். ஆனால் சிலரிடம் அந்த முயற்சி இல்லை. திருப்பி எதிர்ப்பது வன்முறை எனில், அந்த வன்முறையைச் செய்யலாம்” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading