நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முழு காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 9 நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் காட்சிகளும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதால் திரையுலகில் அதிர்ச்சி நிலை உருவாகியுள்ளது. ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், எங்களது திருட்டு தடுப்பு குழு இந்த நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்தக் காணொளிகளை பகிர்வதிலும், பரப்புவதிலும் ஈடுபடும் கணக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், இத்தகைய உள்ளடக்கங்களை அகற்றவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இந்த வீடியோக்களை பகிர்வதையும் பதிவிறக்கம் செய்வதையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
