சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘சன்னிதானம் பிஓ’ திரைப்படத்தை இயக்குநர் அமுதசாரதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, மூனார் ரமேஷ், கஜராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் சுவாமி ஐயப்பனின் மகிமையை எடுத்துரைக்கும் ஒரு சமூகப் பின்னணியைக் கொண்டதாக உருவாகியுள்ளது. சபரிமலை, பம்பை, எருமேலி, சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஆன்மிக மற்றும் இயற்கை சிறப்புகள் நிறைந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
தற்போது, இப்படத்தில் இடம்பெறும் ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ என்ற பக்தி பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் ஐயப்பன் பக்திப் பாடலாக இது அமைந்துள்ளது. சபரிமலை யாத்திரையின் உணர்வுகளையும், பக்தியின் ஆழத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோர் பாடிய இந்தப் பாடலுக்கு மோகன் ராஜன் வரிகளை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஜி.ஆர் இதற்கு இசையமைத்துள்ளார்.
—
