நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தனது திரைப்படத் தேர்வுகள் குறித்து மனம் திறந்துள்ளார். ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், தொடர்ந்து ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’ போன்ற படங்களில் நடித்தும் கவனம் பெற்றார். இந்நிலையில், 2017ஆம் ஆண்டு இயக்குநர் ராஜதுரை இயக்கத்தில் வெளியான ‘முத்துராமலிங்கம்’ திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதோடு, வர்த்தக ரீதியாகவும் தோல்வி படமாக அமைந்தது. தற்போது அவர் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் அவர் இரண்டாம் கதாநாயகனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணலில் கௌதம் ராம் கார்த்திக், “முத்துராமலிங்கம் படத்தின் கதையைத் தேர்வு செய்ததற்கு நான் உண்மையாகவே வருந்துகிறேன். அது என் சினிமா பயணத்தில் நடந்த மிகப்பெரிய தவறான முடிவு. அந்த முடிவு அறிவின்மையாலும் சரியான புரிதல் இல்லாததாலும் ஏற்பட்டது. அதன் விளைவாக, அந்த படம் என் வாழ்க்கையிலும் தொழிலிலும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதன்பிறகு, அதே மாதிரியான பாணியில் உருவாகும் படங்களை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்துவிட்டேன்.
ஒரு கட்டத்தில் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்குப் பொருத்தமான இயக்குநர் முத்தைய்யாவுடன் இணைந்து ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தேன். அந்த படம் பி மற்றும் சி சென்டர்களில் ஒரு அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இன்றும் இப்படியான மாஸ் படங்களில் நடிப்பது குறித்து எனக்குள் ஒரு பயம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
—
