கேரளாவைச் சேர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழ் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். தமிழில் அவர் நடித்த ‘ஜோ’ மற்றும் ‘ஆண்பாவம் பொல்லாதது’ போன்ற படங்கள் அவரை ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்தன. தற்போது, ரவி மோகனுடன் இணைந்து ‘புரோ கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் மாளவிகா மனோஜ், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அளித்த பேட்டியில், தனது சினிமா பயணம் எப்படி தொடங்கியது என்பதை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறியதாவது, “நான் 10ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது, எனக்கு தெரியாமலேயே என் அம்மா ஒரு ஆடிஷனுக்காக என் புகைப்படத்தை அனுப்பிவைத்தார். பின்னர் அந்த குழுவினர் என்னை ஆடிஷனுக்கு அழைத்தனர். நான் சென்று கலந்து கொண்டேன், அதில் தேர்வாகவும் ஆனேன். அந்த வகையில் நான் நடித்த முதல் திரைப்படம் ‘பிரகாசன் பறக்கட்டே’ ஆகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணமே எனக்கு தோன்றவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது அதிகமான வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும், ஆனால் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார். “ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் அது பார்வையாளர்களின் நினைவில் நிலைத்து நிற்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்று அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது ‘ஹபீபி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும், அது உணர்ச்சிப்பூர்வமான மற்றும் ஆழமான கதை கொண்டதாகவும் கூறினார். வசனங்களை விட முகபாவனைகள் மற்றும் உடல் மொழி மூலம் நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய சவாலான கதாபாத்திரம் அது என்றும், இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
—
