நடிகை கயாடு லோஹர், ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, ‘டிராகன்’ திரைப்பட வெளியீட்டு காலத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் ஆகியோருடன் இணைந்து அளித்த பேட்டி வைரலானது. ஆனால் அந்த பேட்டி முழுமையாக திட்டமிடப்பட்டதாகவே இருந்தது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து மேலும் விளக்கமளித்த அவர், “அந்த பேட்டியில் நடந்த அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவையே. அதற்குக் காரணம், அந்த நேரத்தில் நான் அளித்த பேட்டிகளில் என்னிடம் கேள்விகள் கேட்கப்படவே இல்லை. என் பணிகள் குறித்து அவர்களுக்கு முழுமையான தகவல் இல்லாதது எனக்கு புரிந்தது; அதற்கு நான் குறை சொல்லவில்லை. ஆனால் முழு நேரமும் பேட்டியில் அமைதியாக அமர்ந்திருப்பது எனக்கு சிரமமாக இருந்தது. அதனால், படக்குழுவினரிடம் இதைப் பற்றி பேசினேன்,” என்று கூறினார்.
அதற்கு அவர்கள், “உங்களின் பங்களிப்பும் அந்தப் பேட்டியில் வெளிப்பட வேண்டும் என்பதற்காக ஏதாவது செய்வோம்,” என்று கூறியதையடுத்து, அந்த பேட்டியில் அவரை வேறுபட்ட முறையில் இணைத்தனர். “அதுவே பின்னர் சர்ச்சையாக மாறியது. ஆனால் அது முழுவதும் திட்டமிட்ட ஒன்றாகும். பொதுவாக மக்கள் தங்களுக்கான பிஆர் வேலைகளை செய்வது சாதாரண விஷயம்தான். என் நோக்கம் அதை சுவாரஸ்யமாக மாற்றுவது மட்டுமே,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “அந்த சம்பவம் வரை அனைவரும் என்னைப் பாராட்டி நல்ல கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். ஆனால் அதன் பிறகு சிலர் வேறுபட்ட கருத்துக்களை வெளியிடத் தொடங்கினர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. நான் ‘டிராகன்’ படத்தை பிரமோட் செய்வதற்காகவே முயற்சித்தேன். ஆனால் ஒருவர் சொல்வது, அவர் சொல்லும் விதத்தில் எல்லோராலும் புரிந்துகொள்ளப்படாது என்பதை அதன் மூலம் நான் கற்றுக் கொண்டேன்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “இப்போது நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறேன். யாருடனாவது நெருக்கமாக இருந்தால், ஒரு குழந்தையைப் போல மனதில் இருப்பதை நேரடியாக பகிர்ந்துவிடுவேன். ஆனால் தற்போது அதிலும் கட்டுப்பாடு கடைபிடிக்கிறேன். சமூக வலைதளங்களில் எந்த விஷயமும் உடனடியாக பரவி விடுகிறது. அதை நான் கவனித்து வருகிறேன். முன்பு சில பிரபலங்கள் சமூக வலைதளங்கள் ஒரு மோசமான இடமாக இருக்கிறது என்று கூறியதை பார்த்திருக்கிறேன். ஆனால் அதை நான் நேரில் அனுபவித்த பிறகே அதன் உண்மையை புரிந்து கொண்டேன். இப்போது அந்த கமெண்ட்கள் மற்றும் மீம்களை பார்க்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்; ஆனால் அது சுலபமில்லை. அது ஒரு பழக்கமாகி விட்டது. விரைவில் அதை கட்டுப்படுத்துவேன் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
