‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த சம்பவத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்!

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் சுமார் ரூ.500 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படைகள் தொடர்பான சில காட்சிகள் உள்ளதாகக் குறிப்பிட்டு, மறுஆய்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ‘ஜன நாயகன்’ திரைப்படம் மறுதணிக்கைக்காக மீண்டும் அனுப்பப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிந்த பின் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முழுப் பதிப்பு இணையத்தில் முன்தினம் மாலை சட்டவிரோதமாக வெளியானது. இந்த சம்பவம் தயாரிப்பு நிறுவனம், படக்குழு மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த லீக் சம்பவத்துக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், திரைப்படக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று படக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து, ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த சம்பவத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கே.வி.என். நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ முழு திரைப்படம் இணையத்தில் வெளியானது தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் என்றும், ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் வருவாய் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலரின் பொறுப்பற்ற செயலால் திரையுலகமே பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய சினிமா துறையை பாதுகாக்கும் நோக்கில், இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தானாக முன்வந்து, தமிழக அரசு மற்றும் காவல்துறையின் சைபர் பிரிவு இணைந்து குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்படியான செயல்களில் ஈடுபடுவோருக்கு எடுத்துக்காட்டாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘ஜன நாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முழுமையான ஆதரவு அளிக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading