வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தைச் சுற்றி கடந்த சில நாட்களாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அதில் முக்கியமாக, ஆண்ட்ரியா சிம்புவின் தாயாக நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் உருவாகும் கேங்ஸ்டர் கதையில், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். ஆண்ட்ரியா, யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.சில தகவல்களின்படி, கதையின் ஆரம்பத்தில் சிறுவயது சிம்புவின் தாயாக ஆண்ட்ரியா தோன்றுவார் என்றும், பின்னர் சிம்பு கேங்ஸ்டராக மாறும் வகையில் கதை நகரும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த ஆண்ட்ரியா, “நான் சிம்புவின் அம்மா அல்ல. அதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். நான் ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் தான் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படத்தில் ஆண்ட்ரியா நடித்த கதாபாத்திரத்தின் பெயரும் சந்திரா என்பதால், அவரது இந்த பதில் ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
