Advertisement

பம்பரமாய் சுழலும் நயன்தாரா… அவரின் லைன்-அப் என்ன தெரியுமா?

சல்மான் கான், பாலகிருஷ்ணா, மம்மூட்டி, மோகன்லால், யாஷ், நிவின் பாலி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துவரும் நடிகை நயன்தாரா, தனது திரைப்பயணத்தைப் பற்றிய உணர்வுகளை பகிர்ந்துள்ளார். “சினிமாதான் என் வாழ்க்கையாக மாறிவிடும் என்று நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு காட்சியும் இன்று என்னை ஒரு நடிகையாக வடிவமைத்துள்ளது. எனவே சினிமாவுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்” என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழைத் தவிர பிற மொழித் திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நயன்தாரா, தமிழில் பெண்ணை களமாகக் கொண்ட கதைகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, ‘ராக்காயி’, ‘ஹாய்’ போன்ற திரைப்படங்கள் அனைத்தும் அவரை மையமாகக் கொண்ட கதைகளாக உருவாகி வருகின்றன. ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கி முடித்துள்ளார்; இது ஒரு ஃபேன்டஸி திரைப்படமாக இருப்பதால் தற்போது கணினி கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாராவுடன் கவின், பாக்யராஜ், பிரபு, ராதிகா உள்ளிட்ட மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், முதல் பாடல் மே மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘யாரடி நீ மோகினி’ திரைப்படம் போன்ற காதல் கதையாக இது இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கார்த்தி நடித்த ‘சர்தார் 2’ திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் தான் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தையும் தயாரித்துள்ளது. யூடியூப்பர் டியூட் விக்கி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் இந்தப் படத்திற்கான புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ‘ராக்காயி’ திரைப்படம் இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு காலகட்ட (பீரியட்) திரைப்படமாகும்; இதுவும் நயன்தாராவின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

மலையாளத் திரைப்பட உலகில், மம்மூட்டி, மோகன்லால், பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ திரைப்படம் தயாராகி உள்ளது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தில் எடிட்டராக பணியாற்றிய மகேஷ் நாராயணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பும் மலையாளத் திரையுலகில் திரைக்கதை, எடிட்டிங் மற்றும் இயக்கம் போன்ற துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார். ‘பேட்ரியாட்’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், நிவின் பாலியுடன் ‘டியர் ஸ்டுடன்ட்ஸ்’ திரைப்படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் இயக்கியுள்ளனர்; நிவின் பாலி தனது நண்பர்களுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

கன்னடத் திரைப்பட உலகில், ‘கே.ஜி.எஃப்’ மூலம் பிரபலமான நடிகர் யாஷ் உடன் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நயன்தாரா கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்த கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. பான் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் VFX பணிகள் பெங்களூருவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில், நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நான்காவது முறையாக இணைந்து நடிக்கிறார் நயன்தாரா. பாலகிருஷ்ணாவின் 111வது திரைப்பட அறிவிப்பில் “பேரரசிற்கு ராணி வந்துவிட்டார்” என்ற வாசகத்துடன் அவர் இணைந்திருப்பது அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன் ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’, ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’ போன்ற படங்களில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

பாலிவுட்டில், ஷாரூக் கானுடன் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்ததையடுத்து, தற்போது சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறார். நடிகர் விஜய்யை வைத்து ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கிய வம்சி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மும்பையில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply