உளவாளிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை -நடிகர் சரத்குமார்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்தின் இயக்குநரான மனு ஆனந்த் இயக்கத்தில், நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், கவுதம் ராம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சரத்குமார், “உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் தற்போது அதிக அளவில் உருவாகி வருகின்றன. நான் இதுவரை 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் எனக்கு உள்ளது. ஆனால் நாட்டுக்காக உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய, வெளிச்சத்திற்கு வராத வீரர்களின் கதைகளை படமாக்க முன்வருவோர் குறைவாக உள்ளனர்.

நாட்டைப் பாதுகாக்கும் பலர், எங்கோ மறைந்து உளவாளியாக செயல்படுகிறார்கள். அவர்கள் தங்கள் தாயாரிடமும், மனைவியிடமும் கூட தங்களின் பணியின் ரகசியத்தை பகிர முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. இப்படிப்பட்டவர்களே உண்மையான ஹீரோக்கள். அவர்களை பாராட்டுவதற்கான ஒரு வழி சினிமா மட்டுமே. அந்த வகையில் ‘துரந்தர்’ போன்ற திரைப்படங்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

மேலும், ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை காண வேண்டும். அதுவே உண்மையான அனுபவம். அதேபோல், ஒரு படம் திரையரங்குகளில் வெளியான 50 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட வேண்டும். அதற்கான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டால், அது சினிமா துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading