இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஆறாவது திரைப்படமாக ‘மஞ்சணத்தி’ என்ற புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். இந்த அறிவிப்பை முன்னிட்டு சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது குறித்து மாரி செல்வராஜ் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் பேசுகையில், “இளையராஜா சார் உடன் வேலை செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. உண்மையில் இதுவரை நான் அவரை நேரில் பார்த்ததே இல்லை. எனக்குப் பொறுத்தவரை அவர் ஒரு தெய்வீகமான மனிதர். சிறு வயதிலிருந்தே அவரது இசை என் வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஒரு அற்புதமான அனுபவம். அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஏக்கமும் ஆசையும் எப்போதுமே இருந்தது.
ஆனால் அந்த வாய்ப்பை பெறுவதற்கு முன்பு நான் ஒரு இயக்குநராக இன்னும் பக்குவமடைய வேண்டும் என்று நினைத்தேன். ஒரு முழுமையான கதையுடன், நம்பிக்கையுடன் அவரை அணுகும் நிலைக்கு வர வேண்டும் என்று எண்ணினேன். ஒட்டுமொத்த இசையையும் தாங்கி நிற்கும் ஒரு படைப்பை உருவாக்கும் கதையை அவரிடம் சொல்ல வேண்டும். அந்த கதையை கேட்டவுடன் அவர் நம்பிக்கையுடன் இசையமைத்து தர வேண்டும். நாமோ ஓரமாக அமர்ந்து அந்த மாயாஜாலத்தை ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேலும், வீடியோவின் இறுதியில் ‘மஞ்சணத்தி… இளையராஜா… மாரி செல்வராஜ்’ என்று இளையராஜாவிடம் கையெழுத்தாக எழுதி வாங்கிய தருணத்தையும் பகிர்ந்துள்ளனர். அந்த நேரத்தில் பேசிய இளையராஜா, “உண்மையாக நடக்க வேண்டிய விஷயங்கள் நடக்கின்றன, தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன” என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
