லெஜெண்ட் சரவணன் நடிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம், நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘கருடன்’ போன்ற வெற்றிப்படங்களை வழங்கிய இயக்குநரின் புதிய முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தையொட்டி, தனது முந்தைய படங்களில் மாற்றம் செய்ய விரும்பிய அம்சங்கள் குறித்து அவர் அளித்த பேட்டியில் விரிவாகப் பகிர்ந்துள்ளார். அதாவது, ‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் மனோபாலா அவர்களின் கதாபாத்திரத்தை இணைத்தது குறித்து எனக்கு முழு திருப்தி இல்லை. ஆரம்பத்தில் நான் தனுஷ் அவர்களை மனதில் வைத்து எழுதிய அந்தப் படத்தின் வடிவத்தில், இரண்டாம் பாதி மிகவும் தீவிரமான மற்றும் சீரியஸான பாதையில் சென்றது.
ஆனால் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் அவரை முழுக்க பொழுதுபோக்கு கோணத்தில் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதன்படி மாற்றம் செய்யப்பட்டது எனக்கு பின்னர் சரியான முடிவாகத் தோன்றவில்லை,” என்று தெரிவித்தார்.மேலும், ‘கொடி’ திரைப்படத்திற்காக ஆரம்பத்தில் 35 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி, அதன் பின்னர் கிளைமாக்ஸ் காட்சியை முழுமையாக எழுதி முடித்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது தனுஷ் அவர்கள் ‘நான் இப்போது கிடைக்கிறேன்; என்னை வைத்து முழுப் படத்தையும் முடித்துவிடுங்கள்’ என்று கூறியதால், தொடர்ந்து 52 நாட்கள் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடைபெற்றது.
அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணமாக உள்ளது. இனிமேல் படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பே முழு திரைக்கதையையும், குறிப்பாக இறுதி கட்டக் காட்சிகளையும் தெளிவாக எழுதிவிட்டு செல்ல வேண்டும் என நான் உணர்ந்தேன். அதேபோல் ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் வணிக அம்சங்களுக்காக திரைக்கதையில் செய்த சில மாற்றங்கள் தேவையற்றதாக இப்போது தோன்றுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
