கடந்த 2021ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வெளியானது. வடசென்னை பகுதியை மையமாகக் கொண்டு குத்துச்சண்டை விளையாட்டை அடிப்படையாக வைத்து 1980–90களின் காலப்பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் குத்துச்சண்டை வீரர்களாக நடித்த பலரும் பின்னர் ரசிகர்களிடையே தனித்துவமான வரவேற்பைப் பெற்று பிரபலமானார்கள். இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே இயக்குநர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், முதல் பாகத்தில் நடித்த பேட்ட முத்துக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், “சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது. அது தொடர்ச்சிப் பகுதியாகவா அல்லது முன்னோட்டக் கதையாகவா உருவாகும் என்பது குறித்து எனக்கு தெளிவான தகவல் இல்லை. பெரும்பாலும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் என்னை அழைத்தால், உடனே படப்பிடிப்பில் கலந்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
