‘டிரிப்’, ‘தூக்குத்துரை’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் குஷி ரவி, ஒய்.ஜி. மகேந்திரன், கவுசல்யா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள நிலையில், ரவி வர்மா. கே ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் தீபக் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், இயற்கைச் சூழலும் அமைதியும் நிறைந்த ஒரு கிராமத்தில் நிகழும் துயர சம்பவத்தை மையமாகக் கொண்டுள்ளது. அந்தச் சம்பவம் கிராமத்தின் ஒற்றுமையை சிதைக்க, அதை மீட்டெடுக்க மக்கள் மனவலிமையுடன் போராடுகின்றனர். அந்த நிலையில், கிராமத்தை காப்பாற்ற நாயகன் எடுக்கும் துணிச்சலான முடிவுகள், அவரை மக்களின் பார்வையில் தெய்வமாக உயர்த்துகின்றன.
இந்நிலையில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. இந்தப் படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
