கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன் பின்னர் விஜயுடன் ‘மாஸ்டர்’, தனுஷுடன் ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்ததுடன், ‘தங்கலான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். மேலும் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்திலும் தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்துள்ளார்.
தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்றது.
மார்ச் மாதத்தில் சென்னையில் தனியாக இருந்த அனுபவம் குறித்து மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளத்தில் விரிவான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மார்ச் மாதம் எனக்கு கலவையான உணர்வுகளை அளித்தது. அந்த மாதத்தின் முக்கியமான தருணம் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் தியாகராஜன் குமாரராஜா போன்ற திறமையான இயக்குநருடன் பணியாற்றிய அனுபவம். அவர் நம் தலைமுறையின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். அவரின் வேலை முறை மற்றும் அவர் உருவாக்கும் கலைநயம் எனக்கு மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மாதத்தின் பெரும்பகுதியை சென்னையில் படப்பிடிப்புக்காக செலவிட்டேன். வேலை சிறப்பாக இருந்தாலும், வீட்டை விட்டு நீண்ட நாட்கள் தூரமாக இருப்பது என்னை அதிகமாக பாதித்தது. வேலை முடிந்து காலியான அறைக்கு திரும்புவது எளிதல்ல. இந்த முறை அந்த தனிமை என்னை மிகவும் பாதித்தது. ஆனால், என் குடும்பத்தினர் இரண்டு நாட்கள் வந்து சென்றபோது அது எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. சென்னை மற்றும் மகாபலிபுரம் பகுதிகளில் உள்ள கோவில்களை சுற்றி பார்த்தோம், உள்ளூர் உணவுகளை சுவைத்தோம். குறிப்பாக என் பாட்டியின் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு மும்பைக்கு திரும்பி, ஒரு அழகான சூரிய அஸ்தமனத்தை காணும் படகு பயணத்தையும் அனுபவித்தேன். அந்த அனுபவம் மனதிற்கு அமைதியளித்தது. வீட்டை மிகவும் நினைத்தபோதிலும், மும்பையை மேலும் நேசிக்க வைத்த ஒரு அனுபவமாக அது அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.
