இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும், நடிகர் ராணா டகுபதி சார்ந்த ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதன்முறையாக இணைந்து ‘நீளிரா’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளன. இலங்கைத் தமிழரான சோமிதரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா மற்றும் விது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.
இலங்கையில் போர் சூழ்நிலையின் நடுவே நடைபெறும் ஒரு திருமணத்தை மையமாகக் கொண்டு, அந்த சூழலில் உருவாகும் சிக்கல்கள் மற்றும் மனித உணர்வுகளை இந்த படம் எடுத்துக்காட்டுகிறது. உணர்ச்சிப்பூர்வமான பின்னணியுடன் உருவான இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை பாராட்டி நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள காணொளி கவனம் பெற்றுள்ளது. அதில், “நீளிரா என்பது நீண்ட இரவு என்று பொருள். இன்றைய உலகில் நடைபெறும் போர்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன. அந்தச் சூழலில் ஒரு திருமணம் நடைபெறும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த படம் உணர்ச்சிமிக்க திரில்லராக வெளிப்படுத்துகிறது. அந்த இரவை உணர்ந்த ஒருவரே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இலங்கைத் தமிழரான சோமிதரன் இயக்கிய இந்த படம், போர்களின் தாக்கத்தை மௌனமாக பதிவு செய்யும் படைப்பாக மனதில் நிலைத்திருக்கும். இது போரை விரும்பாத அனைவருக்குமான திரைப்படம்” என்று பாராட்டியுள்ளார்.
