விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து வரும் நூறு சாமி திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக சுவாசிகா நடித்துள்ளார். இவர்களுடன் லிஜோ மொல், அஜய் தீஷன், சக்தி, கருணாஸ், காவ்யா அனில், பாடினி, முனீஸ்காந்த், பக்ஸ், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ஒரு இளைஞனுக்கு தந்தையாகவும், சுவாசிகா தாயாகவும் நடித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் சசி கூறுகையில், “நாம் எப்போதும் தாயை தெய்வம், கடவுள், சாமி என போற்றி கொண்டாடுகிறோம். ஆனால் அவர்களை ஒரு உயிராகவும், மனிதராகவும் பார்க்க வேண்டும் என்பதையே இந்த திரைப்படம் வலியுறுத்துகிறது. ஒரு மகன் தனது தாயை சாமியாகக் கருதினால் அது பிச்சைக்காரன்; அதே மகன் தாயை ஒரு மனிதராகக் கருதினால் அது ‘நூறு சாமி’ ஆகும்.
நீண்ட காலமாக உருவாக்கப்பட்ட சில எண்ணங்களை உடைத்து, மனதை உலுக்கும் வகையில் கேள்விகளை எழுப்பும் படைப்பாக இது அமைகிறது. பேரன்பும் துணிவும் இணைந்த ஒரு தாயின் உருவத்தை சித்தரிக்க முயன்றுள்ளேன். இந்தக் கதையை விஜய் ஆண்டனியிடம் பகிர்ந்தபோது அவர் மிகவும் நெகிழ்ந்தார். அவரைவிட சுவாசிகாவுக்கு சிறிது கூடுதல் முக்கியத்துவம் இருந்தாலும், இதில் நடிக்க அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தை விட ‘நூறு சாமி’ திரைப்படம் இன்னும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அவருக்குள்ளது.
லப்பர் பந்து திரைப்படத்தை பார்த்த பிறகு சுவாசிகாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் மிகச் சிறப்பாக பொருந்தினார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு அவர் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடிப்பார். இந்தப் படத்தில் அவர் நடித்த விதம் உணர்ச்சி பூர்வமான பந்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கதாபாத்திரத்துடன் முழுமையாக ஒன்றிணைந்து அவர் சிறப்பாக நடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
