மலையாள திரைப்படத் துறையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் பிரியதர்ஷன், இதுவரை கிட்டத்தட்ட 99 திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்துள்ளார். அடுத்ததாக அவர் தனது 100வது திரைப்படத்தை மோகன்லால் நடிப்பில் இயக்க திட்டமிட்டு உள்ளார். அதற்கு முன்பாக, தற்போது ஹிந்தி மொழியில் ஹைவான் மற்றும் பூத் பங்களா ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் அக்ஷய் குமார் நடித்துள்ள ‘பூத் பங்களா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் வித்யா பாலன் மற்றும் வாமிகா கபி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த திரைப்படம் காமெடி கலந்த ஹாரர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக காமெடி திரைப்படங்களை வழங்குவதில் திறமை வாய்ந்த இயக்குநராகப் பெயர் பெற்றிருந்தாலும், காமெடி கதைகளை உருவாக்குவது தான் மிகவும் கடினமான பணியாக இருப்பதாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “காமெடி திரைப்படங்களை உருவாக்குவது எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எனது முந்தைய படங்களை நான் மீண்டும் பார்க்கும் போது, அவை மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தாலும் கூட, அவற்றை முழுமையாக ரசித்து சிரிக்க என்னால் முடியவில்லை. ஆனால் ரசிகர்கள் அந்தப் படங்களை 10 முறை, 20 முறை என மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இனி வருங்காலத்தில் காமெடி கலந்த ஹாரர் அல்லது காமெடி கலந்த திரில்லர் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்துவதற்கு நான் முடிவு செய்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
