‘போர் தொழில்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘கர’ ஆகும். இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கிராமப்புறத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில், அதிரடி அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிப்பு காணொளி வெளியாகி, ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘கர’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் கதாபாத்திர அறிமுகப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவர் ‘பரதன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை மமிதா பைஜு மற்றும் கே.எஸ். ரவிகுமார் ஆகியோரின் கதாபாத்திர அறிமுகப் போஸ்டர்களும் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
