இந்திய திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராகத் திகழும் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “வாரணாசி” ஆகும். மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர்கள் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். “வாரணாசி” திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீட்டிற்கு இன்னும் கால அவகாசம் இருந்தாலும், படத்தைச் சுற்றிய சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக, காசி கோவில் மற்றும் கங்கை கரை அமைப்பை பிரதிபலிக்கும் மினியேச்சர் செட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
