முன்னணி நடிகர்களான ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர் மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் இணைந்து நடித்துள்ள, இந்தியாவின் முதல் மோட்டார் சைக்கிள் விளையாட்டு திரைப்படமாக உருவாகியிருக்கும் பைக்கர், மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்திய அளவில் 2026 ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் கலந்து கொண்டு பேசியபோது, “இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு வழங்கிய வம்சி அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். அபிலாஷை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷை முதன்முறையாக சந்தித்த தருணத்திலேயே ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டது. கதை கேட்டு முடித்தவுடன் மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இவ்வாறு வேகமும் ஆழமும் நிறைந்த கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஷர்வானந்த் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 1990களிலிருந்து 2000கள் வரையிலான தமிழ்நாடு பின்னணியில் கதை நகர்வதால், அந்தச் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் எளிமையைக் கொடுத்தது. மோட்டார் சைக்கிள் பந்தய உலகின் ஒலி வித்தியாசங்களை உணர்த்துவதில் சவுண்ட் வடிவமைப்பு முக்கிய பங்கு வகித்தது. இந்த படம் இந்திய அளவைத் தாண்டி சர்வதேச அளவிலும் பாராட்டப்படும் என நம்புகிறேன். இப்படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
