சமீபத்தில் அளித்த நேர்காணலில், மலையாள நடிகை மீரா வாசுதேவன் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்துள்ளார். “நான் வாழ்க்கையில் சில தவறுகளை செய்துள்ளேன். எனக்கு மறைக்க எதுவும் இல்லை. இப்போது நான் முன்னோக்கி நகர வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்கள் மூலம் தனது விவாகரத்தை அறிவித்தது குறித்து பேசும்போது, “தவறான தகவல்கள் பரவாமல் இருக்கவும், எந்தவிதமான தவறான புரிதல்களும் உருவாகாதிருக்கவும் தான் நான் சமூக வலைதளங்களில் அதை வெளிப்படையாக தெரிவித்தேன்” என்று கூறினார். இந்த நிகழ்வுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருப்பதை முன்கூட்டியே ஏற்றுக்கொண்டதாகவும், அதை சமாளித்து தனது வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டு செல்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது தனது திரைப்பட பணிகளில் மிகவும் பிஸியாக இருப்பதுடன், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
‘உன்னை சரணடைந்தேன்’, ‘அறிவுமணி’, ‘கத்திக்கப்பல்’, ‘ஆட்ட நாயகன்’, ‘அடங்க மறு’, ‘ஜெர்ரி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘தன்மந்திரா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2005ஆம் ஆண்டு ஒரு ஒளிப்பதிவாளரின் மகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், 2010ஆம் ஆண்டு கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்றார். பின்னர் நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டாலும், அந்த உறவும் நீடிக்காமல் முடிவுக்கு வந்தது. இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார். பின்னர் 2024 மே மாதத்தில் ஒளிப்பதிவாளர் விபின் புத்யங்கத்துடன் திருமணம் செய்து கொண்ட அவர், 2025 ஆகஸ்ட் மாதத்தில் அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றுள்ளார்.
