‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சான்றிதழ் விவகாரம் முடிவுக்கு வந்ததா இல்லையா? வெளியான புது தகவல்!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால், இன்னும் தணிக்கைக் குழு சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. நீதிமன்ற வழக்குகள் மற்றும் பிற பிரச்சினைகள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் மும்பையில் மறுதணிக்கை குழுவினர் இந்த திரைப்படத்தை பார்த்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இதுவரை படக்குழுவிற்கு அதிகாரப்பூர்வ சான்றிதழ் கிடைக்கவில்லை.

மறுதணிக்கையில் சில காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், சில காட்சிகளில் ஒலி நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இயக்குநர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி ஆகியோர் இடம்பெறும் அரசியல் காட்சிகள் தொடர்பாக சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், மறுதணிக்கையில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் வெளியாகவில்லை.

படத்திற்கான சான்றிதழ் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒரு வாரம் கடந்தும் எந்தத் தகவலும் வெளியாகாததால் குழப்பம் நிலவுகிறது. தேர்தல் ஆணையம் இந்த திரைப்படத்தை ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அவர்கள் எப்போது படம் பார்க்கிறார்கள், என்ன தீர்ப்பு வழங்குகிறார்கள், எந்த வகை சான்றிதழ் வழங்கப்படும், எத்தனை காட்சிகள் நீக்கப்படும், எவ்வளவு நேரம் படம் குறைக்கப்படும் போன்ற விவரங்கள் குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.

மேலும், தணிக்கைக் குழு விதித்துள்ள நிபந்தனைகளை இயக்குநர் ஏற்றுக்கொள்வாரா அல்லது அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு செல்வாரா என்பது பற்றியும் கேள்விகள் எழுகின்றன. அதே சமயம், பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாகவும், தேர்தல் முடிந்த பிறகே திரைப்படத்தை வெளியிடுவோம் என முன்பே அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, விரைவில் நல்ல தகவல் வெளியாகும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading