நடிகை ஸ்ருதி ஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், தனது பள்ளிக் கால நினைவுகளை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனும், தற்போது பல மொழித் திரைப்படங்களிலும் முன்னணி நடிகராக விளங்கும் துல்கர் சல்மானைப் பற்றிய நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் பள்ளிக் காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துல்கர் சல்மானைப் பற்றிக் கூறிய ஸ்ருதி ஹாசன், “எங்களின் பள்ளி வாழ்க்கை முழுவதும் சென்னை நகரில்தான் கழிந்தது. நாங்கள் இருவரும் சென்னையில் உள்ள பிரபலமான இரண்டு பள்ளிகளில் கல்வி கற்றோம். அவ்வப்போது சந்தித்து உரையாடி வந்தோம். துல்கர் என்னை ‘சோம்பி’ என்று அழைப்பார். நான் அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும், அவர் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை அதுவாக இருக்கும். பல நிகழ்ச்சிகளில் நண்பர்களுடன் சேர்ந்து ‘சோம்பி’ பாடலை பாடிய அனுபவமும் எனக்கு உள்ளது. அந்த பாடலுக்குப் பிறகே அவர் எனக்கு அந்த பெயரை வைத்தார். அவருடன் படித்தவர்களுக்கு நான் கமல்ஹாசன் மகள் என்றே தெரியும்; என் பெயரை கூட பலருக்கு தெரியாது” என்று சிரித்தபடி நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
தற்போது, துல்கர் சல்மானும் ஸ்ருதி ஹாசனும் இணைந்து ‘ஆகாசம் லோ ஒக்கா தாரா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
