தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்க உள்ள புதிய திரைப்படம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் 23ஆவது திரைப்படமாக இது உருவாக உள்ளது. மேலும், இந்தப் படத்தின் தயாரிப்பில் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் நிறுவனங்களும் இணைந்துள்ளன. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்தப் படம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக, ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்தில் பணியாற்றவில்லை என்றும், அவருக்குப் பதிலாக சாய் அபயங்கர் இசையமைப்பார் என்றும் சில தகவல்கள் வெளியானது. இந்தச் செய்திகள் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், இப்படியான தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
