விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்த ‘ஃபார்ஸி’ வெப் தொடர் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி பெரும் கவனம் பெற்றது. இந்த தொடரை ராஜ் & டிகே இணைந்து இயக்கியுள்ளனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த தொடர், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், இது ஷாஹித் கபூரின் முதல் வெப் தொடராகவும் குறிப்பிடத்தக்கது. கதையில் விஜய் சேதுபதி ஒரு காவல் அதிகாரியாகவும், ஷாஹித் கபூர் மற்றும் அவரது நண்பர் கள்ளநோட்டுகளை உருவாக்கி அதனை பரப்பும் கேரக்டர்களாகவும் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் ராஷி கண்ணா, ரெஜினா, புவன் அரோரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். முதல் சீசனின் முடிவில், ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இடையேயான மோதல் உச்சத்தை எட்டுகிறது. முக்கிய வில்லனான மன்சூர் தலாலை மையமாகக் கொண்டு கதையை முடித்து, அடுத்த சீசனுக்கான வழிகாட்டுதலையும் வழங்கியிருந்தனர். இந்த தொடர் மிகப்பெரிய ஹிட்டாகி, பல தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றது. ‘தி பேமிலி மேன்’ தொடரை உருவாக்கிய ராஜ் மற்றும் டிகே இணைந்து இதையும் எழுதி இயக்கியுள்ளனர்.
‘ஃபார்ஸி’ இரண்டாம் சீசனுக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் நடிக்கும் இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ராஜ் & டிகே தற்போது ‘ராக்த் ப்ரம்மாந்த்’ என்ற புதிய வெப் தொடரையும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
