ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் நடிக்கும் சுந்தர் சி… வெளியான புது அப்டேட்!

‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் செல்வராகவன் நடித்த படங்களையும் தயாரித்த மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஐந்தாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் நடிகர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க, துரை வி.ஜெட். இயக்குநராக பொறுப்பேற்கிறார்.

முன்னதாக ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ போன்ற திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய சுந்தர் சி மற்றும் துரை வி.ஜெட். ஆகியோரின் வெற்றி கூட்டணி மீண்டும் உருவாக இருப்பதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தும் வகையில் திகில் கலந்த பேய் கதையாக உருவாகும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், “சுந்தர் சி மற்றும் துரை வி.ஜெட். இணையும் புதிய படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பை வரும் மே மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் யோகி பாபு, முன்னணி இந்தி திரைப்பட நடிகர் மற்றும் பல முக்கிய தமிழ் நடிகர்கள் இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். மேலும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். ‘பகவந்த் கேசரி’, ‘அகண்டா’, ‘அகண்டா 2’ போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி. ராம்பிரசாத் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முன்னணி கலை இயக்குநரான டி.ஆர்.கே. கிரண் கலை இயக்க பொறுப்பை ஏற்கிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading