பாலிவுட் திரைப்பட உலகில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நடிகர் ரன்வீர் சிங் நடித்த இந்தப் படத்தை இயக்குநர் ஆதித்யா தர் இயக்கியிருந்தார். இந்தப் படம் உலகளவில் மிகப்பெரிய வசூலைப் பெற்று சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், தற்போது ‘துரந்தர் 2’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சி திரையுலக பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தை பார்த்த இயக்குநர் ராம் கோபால் வர்மா, தனது அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறுகையில், “இந்த ‘துரந்தர் 2’ திரைப்படம் ‘ஷோலே’ திரைப்படத்தை விட நூறு மடங்கு பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ‘முகல்-இ-ஆசம்’ முதல் தற்போது வெளியாகியுள்ள மிகச்சிறந்த படங்கள் அனைத்தையும் இது மிஞ்சும். இனிமேல் அந்தப் படங்களை எல்லாம் இதன் முன்னிலையில் ஒப்பிடும்போது தொலைக்காட்சி தொடர்களைப் போலத் தோன்றும். இது புதிய சினிமா வரிசையில் ஒரு புதிய பிறப்பாகவும், இதற்கு முன் இருந்த அனைத்தையும் மறக்கும் அளவுக்கு வலிமையான படைப்பாகவும் உள்ளது. இனி இயக்குநர் என்ற வார்த்தையின் உச்சம் ஆதித்யா தர் என்ற பெயருடன் தொடங்கும். ஹாலிவுட் இயக்குநர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் கூட தங்களது பணிகளை ஒதுக்கி வைத்து இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்ப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
