இயக்குநர் டேனி பாய்ல் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், தேவ் பட்டேல், ப்ரீத்தா பின்டோ, மதுர் மிட்டல், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் 2009ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ஆங்கிலத் திரைப்படம் 81வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை, சிறந்த பாடல் மற்றும் ஒலிக் கலவை உள்ளிட்ட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை வென்று மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்தது.
இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தற்போது வரை தொடர்ந்து வருமானம் கிடைத்து வருவதாக நடிகர் அனில் கபூர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றும் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் மூலம் எனக்கு வருமானம் கிடைத்து வருகிறது. நேற்று கூட எனக்கு 3000 பவுண்டுகள் மதிப்பிலான ஒரு செக் வந்தது. நான் வரி கட்டும் ஒருவராக இருப்பதால் இதைத் திறம்பட சொல்லுகிறேன். இதுவரை இந்த படத்தின் மூலம் மொத்தமாக அரை மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு பணம் பெற்றுள்ளேன். இந்த தொகையை நான் கேட்டு வாங்கவில்லை, அவர்கள் தாமாகவே தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விளக்கமாக கூறியதாவது, “இந்த படத்தில் நான் நடித்தது பணத்திற்காக அல்ல, அனுபவம் மற்றும் கற்றல் நோக்கத்திற்காக தான். அவர்கள் முதலில் என்னை சந்தித்த போது, எனக்கு சம்பளம் வழங்கும் நிலை இல்லை என்று தெரிவித்தார்கள். அதற்கு நான், சம்பளம் தேவையில்லை, நான் இலவசமாகவே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறினேன். ஆனால் தற்போது அவர்கள் தங்களாகவே எனக்கு இந்த தொகையை வழங்கி வருகிறார்கள்” என்று கூறினார். மேலும் இந்த திரைப்படத்தை தயாரித்த ஆங்கிலேய நிறுவனத்தின் வியாபார முறையின்படி, லாபத்தில் பங்கு அல்லது ராயல்டி அடிப்படையில் சம்பளம் வழங்கும் விதமாக அனில் கபூரின் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதனால் தான் அவர் இன்றளவும் அந்த படத்திலிருந்து வருமானம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
