இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில், நடிகர் சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் உருவாகி முடிந்துள்ளது. இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல காரணங்களால் அதன் வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நடிகர் சூர்யா அடுத்து நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து அந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளதுடன், அந்த திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்த சூர்யாவின் பதிவை மறுபதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ள ‘கருப்பு’ படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, “சார்… சஞ்சய் விஸ்வநாத் மற்றும் அன்பான ரசிகர்கள்… அடுத்த திங்கள்…” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் வரும் திங்கட்கிழமை ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பது தெரிகிறது. இதனிடையே, இந்த திரைப்படத்தை மே 15ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
