பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், தற்போது குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பல்வேறு வகை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் ஜாக்கி ஷெராப். அவர் தமிழில் ‘பிகில்’ மற்றும் ‘ஜெயிலர்’ போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
தற்போது ஹிந்தியில் உருவாகி வரும், சூப்பர் ஹீரோ கதையம்சத்தை மையமாகக் கொண்ட ‘தி கிரேட் கிராண்ட் சூப்பர் ஹீரோ; ஏலியன்ஸ் கா ஆக்மேன்’ என்ற திரைப்படத்தில் ஜாக்கி ஷெராப் சூப்பர் மேன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அவரது கதாபாத்திரத்தில் புதிய பரிமாணத்தை காட்டும் வகையில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அந்த திரைப்படத்தில் இருந்து ஜாக்கி ஷெராப்பின் பர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பள்ளி மாணவனின் தாத்தாவாக இருக்கும் ஜாக்கி ஷெராப், தனது பேரனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சூப்பர் மேன் ஆக மாறும் கதை அமைப்பில் படம் உருவாகியிருப்பது தெரிய வருகிறது. மேலும், சூப்பர் ஹீரோ தோற்றத்தை வழங்கும் வகையில் ஜாக்கி ஷெராப்பின் உருவத்தை டி-ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியிருப்பது போன்ற காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
