நான் நடித்த அந்த திரைப்படம் வெற்றி பெறாது என்று முன்பே கணித்தேன் – நடிகை ராஷி கன்னா!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ராஷி கன்னா. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு நடைபெற்று வரும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ராஷி கன்னா தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். அந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பல்வேறு ஊடகங்களுக்கு அவர் பேட்டிகள் அளித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்த ‘தெலுசு கடா’ திரைப்படம் குறித்து அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “ ‘தெலுசு கடா’ திரைப்படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பது படப்பிடிப்பு நடைபெறும் காலத்திலேயே எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது. படப்பிடிப்பு நேரத்தில் எனக்கு பிடிக்காத பல விஷயங்களை நான் அப்போது சொல்லியிருந்தேன். சில காட்சிகளை படமாக்கும் போது அந்த காட்சிகள் எனக்கு சரியாக இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது. இருந்தாலும் இயக்குநர் நீரஜ் கோனா மீது வைத்திருந்த நம்பிக்கையால் அந்த பணியை தொடர்ந்து செய்து வந்தோம்.

கிளைமாக்ஸ் அனைவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். அதனால் அந்த ‘அறுவைச் சிகிச்சை’ சம்பந்தமான காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்தேன். ஆனால் இறுதியில் அந்த காட்சியை தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்த திரைப்படத்தின் அனுபவத்தின் மூலம் நாங்கள் அனைவரும் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொண்டோம். நான் என் கருத்தை இன்னும் வலுவாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று பின்னர் உணர்ந்தேன். படப்பிடிப்பு நடைபெறும் போது திரைக்கதை பல முறை மாற்றப்பட்டது. அது என் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயமாக இருந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

ராஷி கன்னா தெரிவித்த இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக சித்து ஜொன்னலகட்டா நடித்திருந்தார். மேலும் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading