மண் சாலைகளில் நடைபெறும் கார் பந்தயத்தை மையமாகக் கொண்டு ‘மட்டி’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் பிரகபல். அந்த திரைப்படம் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றதையடுத்து அவர் இயக்கிய அடுத்த படம் ‘ஜாக்கி’. கிடா சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ‘மட்டி’ திரைப்படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணா மற்றும் ரிதன் கிருஷ்ணாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தளத்தில் வெளியாகியுள்ள இந்த படம் தற்போது டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து இயக்குநர் பிரகபல் கூறியபோது, “‘ஜாக்கி’ என்பது கிடா சண்டையை மையமாகக் கொண்ட கதை. அந்த சண்டைக்குள் இருக்கும் வாழ்க்கை முறையையும், கிடாவுக்கும் அதை வளர்ப்பவர்களுக்கும் இடையே உருவாகும் பாசப்பிணைப்பையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை உருவாக்கினேன். இது தமிழ் மக்களின் கலாச்சாரத்துடன் நெருக்கமாக தொடர்புடைய ஒரு விளையாட்டு. மண் சார்ந்த ஒரு பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை விட தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் அதிக வரவேற்பைப் பெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. டாப் 10 படங்களின் பட்டியலில் ‘ஜாக்கி’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் பின்னர் ‘மட்டி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான கதை விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்துக்கும் இந்த படத்துக்கும் சில தொடர்புகள் இருந்தாலும், கதைக்களம் முற்றிலும் வேறு இடத்தில் நடைபெறும். இந்த திரைப்படம் வெறும் விளையாட்டு தொடர்பான படம் மட்டுமல்லாமல், சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும். முதல் பாகத்தில் இடம்பெற்ற சில விஷயங்கள் இதில் இடம்பெறாது. பான் இந்தியா அளவில் இந்த திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். முதல் பாகத்தில் நடித்தவர்கள் இந்த படத்திலும் தொடர்கிறார்கள். மேலும் மற்ற மொழிகளில் இருந்தும் நடிகர்களை சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
