நடிகர் விஜய் சேதுபதி தற்போது பல முக்கிய இயக்குநர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குநர் மணிரத்னம், தியாகராஜன் குமாரராஜா, பூரி ஜெகன்நாத் மற்றும் ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டன் ஆகியோரின் படைப்புகளில் அவர் தற்போது பிஸியாக பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில் இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் அவர் முன்னதாக நடித்த ‘ட்ரெயின்’ திரைப்படமும் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படம் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்து, விஜய் சேதுபதியின் முதல் 100 கோடி வசூல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுத் தந்தது.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாக்கம் நடைபெற்று வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இதுகுறித்து விஜய் சேதுபதி நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளார். இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முழுமையான திரைக்கதையை ஏற்கனவே முடித்து வைத்துள்ளதாகவும், அந்த கதையை விரைவில் கேட்பதற்காக தானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
