நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரப்தார்’… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான ‘பேபி ஜான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இயக்குநர் அட்லி தயாரித்த இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘ரவுடி ஜனார்தனா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள மற்றொரு இந்தி திரைப்படத்திற்கு ‘ரப்தார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அனுராக் தாக்கூர், ரோஹன் வர்மா, தான்யா மணிக்தலா மற்றும் ரஜத் கபூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘செக்டார் 36’ திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா நிம்பல்கர் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். நடிகர் ராஜ்குமார் ராவின் மனைவி பத்ர லேகா தனது கம்பா பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் தலைப்பும் வெளியீட்டு தேதியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘ரப்தார்’ திரைப்படம் வருகிற ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அமேசான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் தனது சமூக வலைதளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும், பெரிய லட்சியங்களைக் கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் இடையே உருவாகும் உணர்ச்சிகரமான உறவையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. பணம், அதிகாரம் மற்றும் பேராசை அதிகரிக்கும் சூழலில் வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களின் தீவிர விருப்பம் காதலுடன் மோதத் தொடங்குகிறது. அதன் பின்னர் என்ன நிகழ்கிறது என்பதே இந்த திரைப்படத்தின் கதை. மேலும் இந்தியாவின் வணிகக் கல்வி முறையை நையாண்டியாக சித்தரிப்பதுடன், அறிவை வளர்க்க வேண்டிய கல்வி முறை எவ்வாறு வணிகமாக மாறியுள்ளது என்பதையும் இந்த திரைப்படம் பேசுகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading