நடிகர் கருணாஸ் தனது இசைக் குழுவில் பாடகியாக பாடி வந்த கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியரின் மகன் கென் கருணாஸ். இவர் முதலில் ‘இரட்டைசுழி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் மகனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றார். தற்போது அவர் தனது நண்பர்களுடன் இணைந்து ‘யூத்’ என்ற திரைப்படத்தை இயக்கியும், அதில் நடித்தும் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவரது தாய் கிரேஸ், மகனைப் பற்றி உணர்ச்சியுடன் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: “என் மகனுக்கு ‘அசுரன்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது இயக்குநர் வெற்றிமாறன் என்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தை கூறினார். ‘இந்த திரைப்படத்தில் அவன் நடித்தால் பிளஸ் 2 தேர்வை எழுத முடியாமல் போகலாம். அதற்கு நீங்கள் சம்மதித்தால் சொல்லுங்கள். ஆனால் இந்த படத்தில் நடித்தால் அவனுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உருவாகும்’ என்று அவர் கூறினார். அதை கேட்ட பிறகு நான் சிறிது நேரம் யோசித்தேன். பின்னர் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.”
அதற்குப் பிறகு நான் வெற்றிமாறனிடம் என் மகன் எப்படி நடிக்கிறான் என்று கேட்டபோது, அவர் கூறிய பதில் எனக்கு மிகவும் நினைவில் இருக்கிறது. “எல்லோரும் அவன் நல்லா நடிக்கிறான் என்று பாராட்டி அவனை உயர்த்திக் காட்டுகிறார்கள். ஆனால் தனுஷ் அவனை உண்மையாக மகனாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார். அதேபோல் அவனும் தனுஷை அப்பாவாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். அது ஒரு நல்ல விஷயம். தனுஷ் ஒரு பல்கலைக்கழகம் போன்றவர். அவரிடம் இருந்து நடிப்பு மட்டுமல்லாமல் சினிமா தொடர்பான பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள முடியும். அவருடன் இருந்தால் அவன் நிச்சயம் வளர்ச்சி அடைவான்” என்று வெற்றிமாறன் கூறினார்.
நான் இன்று இந்த மேடையில் வந்து இவ்வாறு பேசுவேன் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. என் மகன் இன்று இந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் தான். அதற்காக எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் ஒரு தாயாக இருப்பதால் எனக்கு இன்னும் அதிகமாக பயமாகவும் இருக்கிறது. இந்த திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்று நம்புகிறேன். என் மகனை நம்பி தயாரிப்பாளர் கோடி கணக்கில் பணம் முதலீடு செய்திருக்கிறார். அவருக்கு எந்த சிரமமும் வரக்கூடாது. அனைவரும் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கண்கலங்கியபடி பேசினார்.
