நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் திருப்திகரமான பலனை பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், படம் வெளியாகி 75 நாட்கள் கடந்த பிறகும் தற்போது வரை சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவது அதன் வெற்றியை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விக்ரம் பிரபு தனது சினிமா பயணத்தைப் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசும்போது, “இந்த படம் எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நான் அதிகமான படங்களில் நடித்தவர் அல்ல. பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன், சிவாஜி கணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என்ற அடையாளம் காரணமாக பல இயக்குநர்கள் என்னை அணுகத் தயங்கினார்கள். எனக்கும் பொருந்தாத கதாபாத்திரங்களை ஏற்காமல் விலகினேன். அதனால் தான் நான் குறைவான திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் எடுத்த முடிவுகளில் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “எனது குடும்பத்தினருக்கே தெரியாமல் தான் நான் ‘கும்கி’ திரைப்படத்தில் நடித்தேன். நான் கதைகளை தேர்வு செய்வதிலும், நடிப்பிலும் என் குடும்பத்தினர் எந்த விதத்திலும் தலையிடுவதில்லை. இருந்தாலும் குடும்பத்தின் பெருமை என்னை எப்போதும் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ‘இவன் யார் தெரியுமா? இன்னாருடைய பேரன்’ என்று சொல்லி என்னை தனியாக்கினர். அந்த அனுபவங்களால் நான் நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு சென்று படித்தேன்.”
அவர் தொடர்ந்து பேசும்போது, “இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் தான் நான் மீண்டும் இந்தியா திரும்பினேன். ஆனால் பின்னர் நடிகராக மாறினேன். எனக்கு எந்த திரைப்படமும் எளிதில் கிடைக்கவில்லை. அதுபோல எந்த திரைப்படத்திலும் நான் எளிதாக நடித்ததுமில்லை. குறிப்பாக ‘டாணாக்காரன்’ திரைப்படத்தில் மிகவும் கடினமாக உழைத்து நடித்தேன். அந்த படத்திற்காக மாநில விருது கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது ‘சிறை’ திரைப்படத்தின் வெற்றி எனக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடுமையாக உழைக்க வேண்டும், பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்பதையே என் வாழ்க்கை பாதையாக வைத்து நான் தொடர்ந்து பயணித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
