தமிழ் சினிமாவில் ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான குரலும் நடிப்பும் காரணமாக கவனம் பெற்றவர் அர்ஜுன் தாஸ். வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், பின்னர் ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து ‘ஒன்ஸ் மோர்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வாஹப் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் இந்த படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்த நிலையில் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
