உலகளவில் அதிக அளவில் திரைப்படங்கள் தயாரித்து வெளியிடும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு திரைப்படமும் பொதுமக்களுக்கு திரையிடப்படுவதற்கு முன் அதற்கான தணிக்கை சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். சினிமாட்டோகிராபி சட்டம் 1952 மற்றும் சினிமாட்டோகிராப் (சான்றிதழ்) விதிகள் 2024 ஆகியவற்றின் அடிப்படையில் திரைப்படங்களுக்கு தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் பணியை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இந்த தணிக்கை வாரியம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அந்த அமைச்சகம் நேற்று ஒரு பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 – 2025 ஆண்டில் மொத்தமாக 15,444 திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 3,033 திரைப்படங்களுக்கு சில காட்சிகளை வெட்டுவதும் மாற்றங்களையும் செய்ய பரிந்துரைத்த பிறகே சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், மேலும் 2 திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2020 முதல் 2025 வரை மொத்தமாக 71,693 திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 41,817 திரைப்படங்களுக்கு ‘யு’ சான்றிதழ், 28,268 திரைப்படங்களுக்கு ‘யுஏ’ சான்றிதழ், மேலும் 1,878 திரைப்படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 2025 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற வழக்குகளின் மூலம் 10 திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சினிமாட்டோகிராபி (சான்றிதழ்) விதிகள் 2024 இன் 37வது விதியின் படி ஒரு திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் காலவரம்பு 48 வேலை நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆன்லைன் தணிக்கை சான்றிதழ் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் முழுநீள திரைப்படங்களுக்கு சுமார் 22 வேலை நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. அதேபோல் குறும்படங்களுக்கு 3 வேலை நாட்களுக்குள் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் வகையில் செயல்முறை விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
