பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ மற்றும் ‘தர்பார்’ திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பாபு விஜய். தற்போது அவர் நடிகர் ஜெய்யை கதாநாயகனாக வைத்து ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, ‘கேஜிஎப்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை இயக்குநர் பாபு விஜய்யே தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் ரிச்சர்ட் எம். நாதன் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திலிருந்து முன்பு வெளியான “அக்கடி கொழுத்து பக்கடி” என்ற பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தின் டைட்டில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் வரிகளை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். மேலும் இந்தப் பாடலை பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
