இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம் இந்த வாரம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அந்தப் படம் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, “சில நாட்களுக்கு முன்பு நான் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை மீண்டும் பார்த்தேன். என் நண்பர் ஒருவர் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியதால், அவருக்கு உடன் அமர்ந்து முழு படத்தையும் மீண்டும் பார்த்தேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆவலையும் அளிக்கிறது” என்று உற்சாகமாக தனது அனுபவத்தை பகிர்ந்தார்.
மேலும் தனது திரையுலக பயணம் குறித்து பேசும்போது, “பெங்களூரில் ஒரு பிரபல புகைப்படக் கலைஞர் மூலம் நான் மாடலிங் துறைக்கு வந்தேன். பின்னர் மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது ஒரு விளம்பர படத்தில் நடித்தேன். அந்த விளம்பரத்தை இயக்குநர் குமாரராஜா சார் பார்த்திருந்தார். அதன் பிறகு அவர் என்னை இந்தப் படத்திற்காக அழைத்தார். பின்னர் ஆடிஷனில் கலந்து கொண்டேன். அதற்குப் பிறகு ரிஹர்சல் செய்து ‘சுப்பு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். நான் நடிகையாக மாறுவேன் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அது முற்றிலும் எதிர்பாராத விஷயமாகவே நடந்தது. முதல் படத்திலேயே இப்படி ஒரு கிரே ஷேட் கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உண்மையில் அப்படியான விஷயங்களை நான் அதிகமாக யோசித்துப் பார்க்கவே இல்லை. நடிகர்களுக்கு இவ்வாறு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் கிடைப்பது மிகப் பெரிய விஷயம். அதனால் எந்த ஸ்டீரியோடைப் பற்றிய எண்ணங்களும் இல்லாமல் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தேன்” என்று கூறினார்.
ஆனால் படம் வெளியான பிறகு அந்த ஸ்டீரியோடைப் தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். “படம் ரிலீஸ் ஆன பிறகு வில்லி போன்ற கதாபாத்திரங்களே அதிகமாக என்னிடம் வந்தன. ஆனால் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தொடர்ந்து செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் இன்று வரை நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை ‘சுப்பு’ என்ற கதாபாத்திரத்துடன் தான் அடையாளப்படுத்துகிறார்கள். அந்த கதாபாத்திரம் எனக்கு மரியாதையையும் நல்ல பெயரையும் பெற்றுத் தந்துள்ளது. சுப்பு கதாபாத்திரத்தில் ஒரு தனித்துவமான ஆட்டிடியூட் இருக்கும். அந்த விஷயத்தில் எனது தனிப்பட்ட குணத்துடனும் அந்த கதாபாத்திரம் ஒரு அளவுக்கு பொருந்தியது. என் கதாபாத்திரத்தைத் தவிர ‘ஐயா’ மற்றும் ‘சப்பை’ ஆகிய கதாபாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை. குறிப்பாக சப்பை கதாபாத்திரம் அனைவராலும் அடக்கப்பட்டு காணப்பட்டாலும், அவனுள் இருக்கும் தைரியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தின் இறுதியில் என் கதாபாத்திரம் ஒரு ஹீரோ போல் தோன்றும். பல பெண்கள் மையப்படுத்திய படங்களில் கதாநாயகிகள் போலீஸ் போன்ற சக்திவாய்ந்த பாத்திரங்களில் காட்டப்படுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் அந்த மாதிரி இல்லாமல் நான் வேறொரு விதமாக ஹீரோவாக தோன்றுவேன்” என்று கூறினார்.
மேலும் அவர் தனது படப்பிடிப்பு அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். “சிறு வயதில் ‘ராம் லக்கான்’ போன்ற ஜாக்கி ஷெராஃப் நடித்த படங்களை நான் ரசித்து பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் எந்த விதமான ஸ்டார் போக்கும் காட்டமாட்டார். அனைவருடனும் மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் பழகுவார். தமிழ் கற்றுக்கொள்ளவும் அவர் படப்பிடிப்பு தளத்தில் முயற்சி செய்தார். பெரிய நட்சத்திரங்களுடன் நடிக்கும் போது சாதாரணமாக ஒரு தயக்கம் இருக்கும். ஆனால் அவர் எங்களுக்கு எந்தவிதமான பதட்டமும் ஏற்படாமல் இயல்பாக நடிக்க உதவினார்.
இயக்குநர் குமாரராஜா பற்றி அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தில் நான் சமோசா சாப்பிடும் ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சிக்காக மட்டும் சுமார் 15 டேக்குகள் எடுத்தோம். நான் நடித்த காட்சிகளில் அதுவே அதிக டேக்குகள் எடுத்த காட்சியாகும். படத்தில் எனக்கு நிறைய முக்கியமான வசனங்கள் உள்ளன. அதில் வாழ்க்கை சுழற்சி பற்றி வரும் ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் நான் பேசும் பல வசனங்களுக்கும் தத்துவ ரீதியான அர்த்தங்கள் உள்ளன. மேலும் க்ளைமேக்ஸ் காட்சியில் நான் பேசும் வசனம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அந்தக் காட்சியை நான் ஐந்து டேக்குகளில் முடித்துவிட்டேன். அந்தக் காட்சியில் ‘ஓரம் போ’ திரைப்படத்தின் யூனிவர்ஸுடன் ஒரு தொடர்பும் இருக்கும். அதைப் பற்றி அப்போது இயக்குநர் குமாரராஜா எங்களுக்கு ‘ஈஸ்டர் எக்’ போன்ற ஒரு விஷயமாகவே விளக்கி கூறினார் என்று தெரிவித்தார்.
இந்தப் படத்தில் ஏதோ ஒரு முக்கியமான தனிச்சிறப்பு இருப்பதால்தான் இப்போது இந்த திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. தற்போது இது ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது என்று கூறினார். மேலும் அவரது அடுத்த படங்கள் குறித்து கேட்டபோது, “சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு நான் காத்திருக்கிறேன். பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.
