மம்மூட்டி- மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

மலையாள திரையுலகில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ‘திரிஷ்யம் 3’ மற்றும் ‘பேட்ரியாட்’ ஆகிய இரண்டு படங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகர் மோகன்லால் நடித்துள்ளார். குறிப்பாக ‘பேட்ரியாட்’ திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பல போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

ஆனால் கேரளாவில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம், திரைப்பட வசூலில் பங்கு சதவீதத்தை பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘பேட்ரியாட்’ திரைப்படத்தை திரையிட மாட்டோம் என்று சமீபத்தில் அறிவித்தது. இதனால் இந்த திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் அந்த அறிவிப்புக்கு பிறகும் வெளியிடப்பட்ட மகளிர் தின சிறப்பு போஸ்டரில் கூட ‘பேட்ரியாட்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டு தோட்டப்போல்’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலைப் பற்றிய தகவலை இசையமைப்பாளர் சுசின் ஷியாம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த போஸ்டரில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. மேலும் அவர் வெளியிட்ட பதிவிலும் ‘படம் விரைவில் வெளியாகும்’ என்ற தகவல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால் முன்பே அறிவிக்கப்பட்ட தேதியில் ‘பேட்ரியாட்’ திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading