நடிகை பிரியங்கா சோப்ரா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளவர். தனது நடிப்பின் மூலம் உலகளவில் பெரிய அளவில் புகழ் பெற்ற நடிகையாக அவர் திகழ்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரியங்கா சோப்ரா என்றால் உடனே நினைவிற்கு வருவது 2002ஆம் ஆண்டு மஜீத் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த ‘தமிழன்’ திரைப்படம் தான்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘தமிழன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை பிரியங்கா சோப்ரா பகிர்ந்து கொண்டார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, ‘தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது நடிகர் விஜய்யை நேரில் பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்ததை பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன் என்று தெரிவித்தார்.
மேலும் விஜய்யின் ரசிகர்கள் அவரிடம் காட்டிய அன்பும் உற்சாகமும் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றும் அவர் கூறினார். அந்த ரசிகர்கள் காட்டிய பாசம் ஒரு தெய்வீகமான உணர்வைப் போல இருந்தது என்றும் குறிப்பிட்டார். அப்போது தான் இந்திய ரசிகர்கள் தங்களது பிடித்த நடிகர்களுக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் என்பதை முதன்முறையாக நேரில் உணர்ந்தேன் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
