‘மிஸ் வேர்ல்ட்’ பட்டத்தை வென்ற பிறகு சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அவர் பாலிவுட்டைத் தாண்டி ஹாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்து உலகளவில் புகழ்பெற்ற நடிகையாக உருவெடுத்துள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்படங்களிலும் தொடர்களிலும் நடித்ததன் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். தற்போது அவர் பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா நேரடியாக இந்தியாவில் நடிக்கும் திரைப்படமாக இது அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் நடைபெற்ற ஒரு பட விழாவில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, சினிமா துறையில் நிலைத்து நிற்பது எவ்வளவு சவாலானது என்பதை பற்றி தனது கருத்துகளை பகிர்ந்தார். அவர் கூறும்போது, “சினிமாவை வெளிப்படையாகப் பார்த்தால் அது மிகவும் எளிதானதாக தோன்றலாம். ஆனால் அந்தக் குதிரையில் ஏறி சவாரி செய்வது போல இந்தத் துறையில் பயணம் செய்வது எளிதானது அல்ல. இங்கு உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் நமக்கே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் இந்தத் துறையில் முன்னேறுவதற்கு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சில நேரங்களில் அதிர்ஷ்டம் நமக்குச் சாதகமாக இருக்காது. அப்படிப்பட்ட நேரங்களில் புதிய முயற்சிகளை செய்து பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அந்த வகையில் தான் நான் என் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க ஹாலிவுட் சென்றேன். அங்கு என் திறமையை நிலைநிறுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்குத் தோன்றியது. அதனால் அங்கும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இந்தத் துறையில் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கலாம். ஆனால் அந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதே உண்மையான சவால்” என்று அவர் தெரிவித்தார்.
