கென் கருணாஸ் ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். இந்தப் படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் அவர் தனித்துவமான இடத்தைப் பெற்றார். இதற்கிடையில் நடிகர் தனுஷின் சில திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் ‘யூத்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் அனிஷ்மா, தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்று (மார்ச் 13) நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், கென் கருணாஸ் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்தார். அவர் கூறும்போது, “கென் கருணாஸை முதலில் நான் ‘அசுரன்’ திரைப்படத்திற்காக எடுத்த புகைப்படப் படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அவனை பார்த்தவுடன் ‘இவன் இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்த மாட்டான்’ என்று இயக்குநர் வெற்றி மாறனிடம் கூறினேன். அவன் சற்று உருண்டையான உடல் அமைப்புடன் இருந்ததால் மகன் கதாபாத்திரத்திற்கு பொருந்தாது என்று நினைத்தேன். அதனால் வேறு யாரையாவது அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் நல்லது என்று கூறினேன்.
அதற்கு இயக்குநர் வெற்றி மாறன், ‘சில நாட்கள் நேரம் கொடுங்கள். அவனை உடல் எடையை குறைத்து வரச் சொல்கிறேன்’ என்று கூறினார். அதற்கு நான் ‘சரி வெற்றி சார்’ என்று சம்மதித்தேன். அதன் பிறகு கென் கருணாஸை நான் மீண்டும் பார்க்கவில்லை. நேரடியாக ‘அசுரன்’ திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில்தான் அவனை மீண்டும் பார்த்தேன்.
முதல் ஷாட்டிலேயே அவன் நடித்த விதத்தை பார்த்தபோது ‘இவனிடம் ஒரு தனித்துவமான திறமை இருக்கிறது’ என்று வெற்றி மாறனிடம் கூறினேன். அவன் வயதில் சிறியவன் என்றாலும், அனைவரின் முன்னிலும் எந்த தயக்கமும் இல்லாமல் நன்றாக நடித்தான். அந்த கதாபாத்திரத்திற்கு அவனை தேர்வு செய்தது சரியான முடிவுதான் என்று வெற்றி மாறனிடம் சொன்னேன். அதனால் கென் கருணாஸை கண்டுபிடித்த பெருமை முழுவதும் வெற்றி மாறனுக்கே சேரும்; எனக்கு அல்ல. மேலும் அவன் எனக்கு பப்ஜி விளையாட்டு நண்பன். அதன் பிறகு கென்னும் நானும் நல்ல நண்பர்களாக மாறினோம்” என்று தனுஷ் பேசினார்.
