மற்றொரு புதிய இயக்குனரை அறிமுகப்படுத்திய நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அவர் தயாரித்த திரைப்படங்கள் மூலம் பல புதிய இயக்குநர்கள் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில் அருண் ராஜா காமராஜ் (‘கனா’), கார்த்திக் வேணுகோபால் (‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’), சிபி சக்ரவர்த்தி (‘டான்’), பி.எஸ். வினோத்ராஜ் (‘கொட்டுக்காளி’), டி. ராஜவேல் (‘ஹவுஸ்மேட்’), சிவகுமார் முருகேசன் (‘தாய்கிழவி’) ஆகியோர் சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்திய முக்கியமான இயக்குநர்களாக பார்க்கப்படுகின்றனர்.

இந்த வரிசையில் அடுத்ததாக தனது எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட இருக்கும் 10வது திரைப்படத்தை அம்மாமுத்து சூர்யா என்ற புதிய இயக்குநர் இயக்க உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். ‘தாய்கிழவி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். தற்போது அம்மாமுத்து சூர்யா இந்தப் படத்திற்கான திரைக்கதை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும், அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இளைஞர்களை மையமாகக் கொண்ட காதல் மற்றும் ரொமான்ஸ் கலந்த கதையாக இருக்கும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

அம்மாமுத்து சூர்யா இதற்கு முன்பு நடிகர் ஆர்.ஜே. பாலாஜியை வைத்து ‘ஹேப்பி எண்டிங்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படத்தின் பணிகள் நடுப்பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அம்மாமுத்து சூர்யா மீண்டும் அறிமுகமாக உள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading